- யோவான் 19:15-16 அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு [பிலாத்து] அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.
இயேசுவின் இந்தக் கூற்றுக்கு அர்த்தம் என்ன? “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்”
- மாற்கு 8:34-35 பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
பதில்: இயேசு கிறிஸ்துவைப்பற்றிய உண்மையை ஒரு நபர் தெரிந்துகொள்ளும்போது, ஒரு முடிவை அவர் எடுக்கவேண்டும்.
இந்த முடிவு மிகத் தெளிவானது. ஏனென்றால், கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டே வழிகளில் ஒரு வழியை அவர் தேர்வு செய்யவேண்டிய கட்டாயம் அந்த முடிவில் இருக்கிறது.
எந்தப் பாதையை அந்த நபர் தெரிந்தெடுக்கிறார் என்பதில் அவரது மொத்த எதிர்காலமே அடங்கி இருக்கிறது. இயேசு தம்மைப்பற்றி அறிவித்த உண்மையைக் கேட்டபின், கேட்டவர் செய்யவேண்டிய முடிவு: நான் இயேசுவை விசுவாசித்து அவர்மேல் என் நம்பிக்கையை வைப்பேனா அல்லது அவரை நிராகரிப்பேனா? இயேசுவை ஏற்றுக்கொள்வேனா அல்லது அவர் மீண்டும் சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுப்பேனா?
இயேசு தம்மைப்பற்றி அறிவித்தது உண்மை என்று ஏற்றுக்கொள்ளும்போது இன்னொரு முடிவை எடுக்கவேண்டியது இருக்கிறது: நான் இயேசுவைப் பின்பற்றி அவருடைய சீஷனாக [பின்செல்லுபவனாக] மாறுவேனா? அல்லது நான் இயேசுவை நிராகரித்து அவரைபற்றிக் கேள்விப்படும் முன் எப்படி வாழ்ந்தேனோ தொடர்ந்து அப்படியே வாழ்வேனா?
நான் இயேசுவைப் பின்பற்றுபவனாக மாறும்போது, அவர் என்னுடைய இரட்சகராக மட்டுமல்ல, என்னுடைய ஆண்டவராகவும் ஆகின்றார். நான் என்னுடைய சுயவிருப்பத்தின்படி அவருடைய நடத்துதலுக்கும், ஆட்சிக்கும் என்னை ஒப்புக்கொடுக்கிறேன். இதன் அர்த்தம், பாவத்தினால் ஆதாமிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட ஆசையான எனக்கு நானே “தேவனாக” இருந்து, என்னுடைய வாழ்வை நானே ஆட்சி செய்ய முயலும் ஆசையை மறுத்து விட்டுவிடுகிறேன் என்பதாகும்.
இதனால்தான் இயேசு மேலும் விளக்கினார், “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.”
எல்லா மனிதருமே தங்களுக்குத் தாங்களே “தேவனாக” இருக்கும் விழுந்துபோன ஆசையை தங்களுக்குள் கொண்டே பிறக்கின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே ஆண்டு, தாங்கள் விரும்பிய எல்லாவற்றையும், தாங்கள் விரும்புகின்ற நேரத்தில், விரும்பும்போதெல்லாம் பெறத்தக்கதாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வீண்முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
இயேசு உலகத்திற்கு வந்து எளிமையாக அறிவிக்கின்றார் [வேறு வார்த்தைகளில்]: “இந்தச் சிந்தனையானது இந்த உலகத்தில் உன்னுடைய வாழ்வில் பெருந்துன்பத்துக்கும், மறுமையில் நித்தியமாக நரகத்தில் தேவனை விட்டுப் பிரிக்கப்பட்ட நிலைக்கும் கொண்டுசென்றுவிடும். நீ உன் வாழ்வைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை என்னிடம் விட்டு உன் வாழ்வை “இழப்பாயானால்”, நீ உண்மையில் முக்கியமான காரியங்களில் உன் வாழ்வை “இழக்காமல்” கற்பனைக்கெட்டாத ஆசீர்வாதங்களையும் ஆனந்தத்தையும் பெற்றுக்கொள்வாய்.”
பிலாத்து இயேசுவைப் பற்றி நித்தியமான ஒரு முடிவை எடுப்பதில் நமக்கு மிகவும் தெளிவான ஒரு உதாரணத்தைத் தந்திருக்கிறான்.
இந்த முடிவை எடுப்பதில் மனதுக்குள் போராடி, ஆனால் தன் மனச்சாட்சிக்கு விரோதமாக, இயேசுவை நிராகரித்து, அவரைச் சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுத்த ஒரு மனிதனைப் பற்றிய மறுக்கமுடியாத பதிவை பிலாத்து நமக்குத் தருகிறான். யூதேயாவின் ரோம அதிபதியாக இயேசுவைப் பற்றி விசாரித்தபின், இயேசு குற்றமற்றவர் என்று பிலாத்து தெளிவாகக் கண்டறிந்துகொள்ளுகிறான். தமது இராஜ்ஜியம் இந்த உலகத்துக்குரியதாக இராமல், வேறொரு ஆவிக்குரிய உலகத்தைச் சேர்ந்தது என்று இயேசு சொன்னதை பிலாத்து ஓரளவு நம்பியதைப் போலவே உண்மையில் தெரிகிறது. “நித்திய முடிவுக்குச்” செல்லும் இருவழிச் சந்தியில் பிலாத்து நின்றுகொண்டிருந்தான்.
இயேசுவோடு கூடிய இந்தச் சந்திப்பிற்கு முந்தின நாள் இரவு, அடுத்தநாள் தனது நித்திய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முடிவை எடுக்கவேண்டியதிருக்கும் என்று சிந்தியாமல் பிலாத்து நித்திரைக்குச் சென்றான். ஆனால் சீக்கிரத்தில், தனது முடிவை எடுக்க சில கணப்பொழுதுகளே இருக்கும் நிலையில் அவன்மீது அழுத்தம் கொடுக்கப்படப் போகிறது. தன் முழு வாழ்க்கையிலும் சந்தித்தவைகளிலேயே மிக முக்கியமான முடிவை எடுக்கவேண்டிய நிலையைச் சந்திப்போம் என்ற சிந்தனை இல்லாமல் அந்த நாள் காலையில் விழித்தெழுகிறான்.
மனிதராகிய நம்மெல்லாருக்கும் இது உண்மை. ஒரு நாள் கடக்கப்படவேண்டிய ஒரு கோடு நம்முன் வைக்கப்படும். கடப்போமா, மாட்டோமா என்பது நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் கொடுக்கவேண்டிய பதில்.
- வெளி 20:11-12, 15 பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
பிலாத்து என்ன முடிவை எடுப்பான்? குற்றமற்ற மனிதரான இயேசுவை அவன் விடுதலை செய்வானா அல்லது அவரை நிராகரித்து மரண தண்டனை கொடுப்பானா? மதத் தலைவர்கள் அவன் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்காவிட்டால் அவனைப் பற்றி ரோம அரசருக்குப் புகார் கொடுப்போம் என்ற பொருள் பொதிந்த வார்த்தைகளைச் சொன்னபோது, உலகத்துக்குரிய தனது இரஜ்ஜியம், பதவி இவைகளை “இழக்கும் வாய்ப்பை” பிலாத்து சந்தித்தான்.
பிலாத்து எடுத்த முடிவு. யோவான் 19:5-16 இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான். பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள். பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து, மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள். பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான். அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான். அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.
இயேசு கிறிஸ்துவை நிராகரிக்கும் எந்த நபரும் குற்றமற்றவர் அல்ல. இயேசுவைப் பற்றி ஒரு தெளிவான முடிவை எடுப்பதைத் தவிர்க்கப் பிலாத்து முயற்சித்தான். அதற்காக, தனது கரங்களைக் கழுவி அதை ஒரு பெரிய காட்சியாக்கினான்.
- மத்தேயு 27:24 கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
பிலாத்து “தன் கரங்களை கழுவும்” காட்சியை வீணாகச் செய்தான். பிலாத்து தனது இருதயத்தில் இயேசு குற்றமற்றவர் என்று அறிந்திருந்தான். இருந்தாலும் அவருக்கு எதிராக தனது முடிவை எடுத்தான். இயேசுவைப்பற்றின தெளிவான, மறுக்கமுடியாத உண்மையை நிராகரித்து, தனது வாழ்வையும், பதவியையும் காப்பாற்ற பிலாத்து முயற்சித்தான். அதனால், நரகத்தில் நித்தியமாக இயேசுவை விட்டுப் பிரிக்கப்படும் தனது எதிர்காலத்தை உறுதி செய்தான்.
இதற்கு ஒரு தெளிவான இணையாக, நாம் ஒவ்வொருவரும் இதே விதமாக முடிவெடுக்கவேண்டிய சூழ்நிலையைச் சந்திக்கிறோம். நம் ஒவ்வொருவர் முன்பாகவும் ஒரு கோடு வரையப்பட்டிருக்கிறது. இயேசு தெளிவாக நம்மெல்லாருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த உண்மை தவிர்க்க இயலாதது. ஒரு தேர்வு இங்கே செய்யப்பட்டாக வேண்டும். இருதயத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஒருவர் எடுத்து வைக்கும் அடுத்த அடியே தெளிவாகக் காட்டிவிடும். ஒரு பாதை “இயேசுவைப்பற்றிச் சொல்லப்பட்டவை உண்மை” என்று அறிவித்து, “இந்த மனிதர் இயேசு கிறிஸ்து. இவர் என்னுடைய ஆண்டவரும், இரட்சகருமாக இருக்கிறார். நான் மன்னிப்பைப் பெற்று நித்தியமாக அவரோடு வாழும்படி, அவர் எனக்காக மரித்தார். நான் என் வாழ்வை அவருக்குக் கொடுக்கிறேன்!” என்று இருதயத்திலிருந்து குரல் எழும்பச் செய்கிறது.
அடுத்த பாதை, “நான் இயேசுவை விசுவாசிக்க மாட்டேன். நான் இயேசுவை நிராகரிப்பேன். நான் என் சொந்த அதிகாரத்தின்கீழ் தொடர்ந்து என் வாழ்வை வாழ விரும்புகிறேன்.” என்று அறிவிக்கிறது.
இன்று நீங்கள் எதைத் தேர்வு செய்யப்போகிறீர்கள்? தேர்வு செய்ய உண்மையில் இந்த இரண்டு பாதைகள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு மனிதரும் ஒரு தேர்வைச் செய்வார்கள். அவர்களுடைய அடுத்த அடி அவர்களுடைய நித்தியமான எதிர்காலத்தை நிர்ணயிக்கிற முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
– லூக்கா 23:38-43 38. இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு [இயேசு] மேலாக வைக்கப்பட்டது. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இயேசுவுக்கு அருகாக சிலுவையில் அறையப்பட்ட அந்த நாளிலே அந்த இரண்டு குற்றவாளிகளும் தாங்கள் முடிவெடுக்கவேண்டிய கோட்டைச் சந்தித்தார்கள். உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் அதேபோல ஒருநாள் வரும். ஒரு குற்றவாளி இயேசுவை நிராகரித்து “தனக்குத் தானே தேவனாக” மரித்தான். அடுத்த குற்றவாளி, இயேசு கிறிஸ்துவைப்பற்றிய அதே உண்மையைச் சந்தித்தபோது, தாழ்மையடைந்து, மனந்திரும்பி, தான் நித்தியமாக ஆசீர்வதிக்கப்படத் தக்கதாக எளிமையான இந்த வார்த்தைகளைக் கூறினான், “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்.”
நீங்களும், நானும், ஒவ்வொரு மனிதரும் ஒரு நாள் இயேசுவின் அருகே இருந்த இந்த இரண்டு குற்றவாளிகளில் ஒருவனைப்போல, இயேசுவை விசுவாசிக்கிறவராக மரிப்போம் அல்லது இயேசுவை நிராகரிக்கிறவராக மரிப்போம்.
இன்று, கடக்கப்படவேண்டிய “அந்தக் கோடு” உங்கள்முன் தெளிவாக விவரித்துக் காட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் பிலாத்துவுடனே இருந்துவிடத் தேர்வு செய்வீர்களா அல்லது இயேசுவுக்கு அருகே சிலுவையில் இருந்த மனந்திரும்பிய குற்றவாளியுடன் இணைந்து, “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் ” என்று அவரை நோக்கிச் சத்தமிடுவீர்களா?
- ரோமர் 10:9-11 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
நீங்கள், ஏறத்தாழ 2000 வருடங்களுக்குமுன், நித்தியமாக இழக்கப்பட்டுப்போன பிலாத்துவைப்போலிருக்கத் தேர்வு செய்வீர்களா அல்லது அந்தச் சிலுவையிலே நித்தியமாக இரட்சிக்கப்பட்ட அந்தக் குற்றவாளியைப்போலிருக்கத் தேர்வு செய்வீர்களா?
அனைவருக்கும் எங்கள் முழு அன்பையும் தெரிவிக்கிறோம்.
கிறிஸ்துவிலே,
Jon+Philis+Friends@WasItForMe.com