பதில்: ஒருவருக்கு அதிகபட்சமாக எவ்வளவு மதிப்பு கொடுக்க முடியுமோ அவ்வளவு மதிப்பு! இயேசு சரித்திரத்திலேயே அதிக மதிப்பு வாய்ந்த அறிவிப்பை முழு உலகத்திற்கும் பெண்கள் மூலமாக அனுப்பினார்.
- யோவான் 20: 16. இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். 18. மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.
- லூக்கா 24: 1. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். 2. கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு, 3. உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், 4. அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள். 5. அந்த ஸ்திரீகள் பயப்பட்டு தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? 6. அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். 7. மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
உண்மை எண் 1: கிறிஸ்துவுக்குள், எல்லா பெண்களும், நம்மால் புரிந்துகொள்ள முடியாதபடி, நம்முடைய அறிவுத்திறனுக்கு அப்பாற்பட்ட விதத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும், மரியாளும், மற்றப் பெண்களும் செய்தது போல, “அவர் உயிர்த்தெழுந்தார்!” என்று அறிவிக்கும் செயலை மட்டுமே செய்து அனுதினமும் பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்த்துவைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.
உண்மை எண் 2. தான் கிறிஸ்து என்பதையும், தன்னுடைய ஊழியம் என்ன என்பதையும் அறிவித்து இயேசு சொன்ன முதல் வார்த்தைகள் நிச்சயமாக எல்லா மனிதருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
– லூக்கா 4: 17. அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: 18. கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், 19. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, [கண்டார்] [ஏசாயா 61:1-2]
உண்மை எண் 3. கர்த்தருடைய அநுக்கிரக வருஷம் எது? -2 கொரிந்தியர் 6:1. தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். 2. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.
இந்த முக்கியமான உண்மையை நீங்கள் புரிந்துகொள்வது ஏன் அவசியம்? எல்லா மனிதரும் இந்த உலகத்தில் பிறக்கையில் பிசாசினுடைய பிள்ளைகளாகப் பிறந்து, “தன்னைத் தானே ஆண்டுகொள்ளும்” விருப்பத்தைப் பின்தொடரச் செய்யும் விழுந்துபோன பாவக் குணாதிசயத்திற்கு/தன்மைக்கு அடிமைப்பட்டவர்களாக/சிறைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். “தங்களுக்குத் தாங்களே கடவுள்களாக: இருக்க விரும்பும் “சுய சித்தத்தைச்” செயல்படுத்துவதன்மூலம் எல்லா மனிதரும் கஷ்டங்களுக்குத் தப்பித்து, இன்பத்தை அடைய தங்கள் சொந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முயற்சித்து, மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக முதலாவதாகத் தங்களைத் தாங்களே அதிகமாக நேசிக்கிறார்கள்.
உண்மை எண் 4. இயேசு கிறிஸ்து மனிதரை விடுதலை செய்ய வந்தார்! நாம் எதிலிருந்து விடுதலை செய்யப்படுவது மிகவும் முக்கியம்? நமது சுய சித்தம்/சொந்த விருப்பம்! ஆதாமும் ஏவாளும் தோட்டத்தில் செய்த பாவம் நம்மை தேவனிடமிருந்து பிரித்தது. நமது வாழ்விற்கு மிகச் சிறந்ததும், நன்மையுமான பரிசுத்த தேவனுடைய சித்தத்தைத் தள்ளிவிட நம்முடைய மரித்துப்போன இருதயங்கள் தொடர்ந்து விரும்புகின்றன. நமது உலகத்திற்கு நாமே ராஜாவாக/ராணியாக இருப்பதில் தான் நமது மகிழ்ச்சி இருக்கிறது என்று பிடிவாதமாக இருக்கிறோம். நமது சொந்த விருப்பத்தை நிறைவேற்றுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பதால், வருந்தத்தக்க விதமாக, நம்மால் யார் பாதிக்கப்படுகிறார்கள் என்று கவலைப்படாமல், நாம் விரும்பியதைப் பிடிவாதமாகச் செய்து, நாம் தொடும் அனைத்திற்கும் கேடு விளைவிக்கிறோம். நம்முடைய விழுந்து போன, பாவம் நிறைந்த நிலையில் மற்ற மனிதரை, நமது சொந்த லாபத்திற்கும், இன்பத்திற்கும் உபயோகப்படும் பொருள்களாக நாம் பார்க்கிறோம்.
இந்தப் பொல்லாத சிந்தனைக்கு அடிமைபட்டதாக உலகம் அதைப் பின்பற்றி செல்லுகிறது. “நான் உன்னைவிட வலிமையுள்ளவன். அதனால், நான் சொல்வதை உன்னை வலுக்கட்டாயமாகச் செய்யவைப்பேன்!”
இயேசு உலகத்திற்கு வந்து இந்தப் பாவச் சிந்தனையும், செயல்பாடும், பரிசுத்த தேவனுடைய நீதியான சிந்தனைக்கு அப்படியே எதிரிடையானதாக இருக்கிறது என்று அறிவிக்கிறார்.
-மாற்கு 10: 41. மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள். 42. அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 43. உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். 44. உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 45. அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
ஆண்களும், பெண்களும் வாழ்க்கையில் வெற்றி என்பது, ஒரு பிரமிடின் வடிவத்தில் கீழே பெரிதானதாகவும், மேலே ஒற்றைப் புள்ளி அளவு இருப்பதாகவும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். யாருக்கு அதிகபட்ச வலிமை/அதிகாரம் இருக்கிறதோ அந்த நபர் பிரமிடின் உச்சியில் இருக்கிறார். எந்த நபர் தனக்குக் கீழே தனக்கு வேலை செய்ய அதிகமான பேரைக் கொண்டிருக்கிறாரோ அவரே மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட இடத்தில் இருக்கிறார் என்று நினைக்கின்றனர்.
இதற்கு எதிரிடையானதே உண்மை என்று இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். உண்மையான மகிழ்ச்சியும், சமாதானமும், திருப்தியும் மனதில் கொண்டிருக்கும் ஒரு நபர் உண்மையில் வாழ்வின் இந்தப் பிரமிடைத் தலைகீழாகத் திருப்புகிறார். அவர் அதிகபட்சமான மனிதருக்கு வேலை செய்கிறவராயிருக்கிறார்.
ஆண்கள் அதிக உடல் வலிமையுள்ளவர்களாய்ச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய பாவம் நிறைந்த சிந்தனையில், ஆண்கள் தங்கள் உடல் வலிமையைத் தவறாகப் பயன்படுத்த நினைத்து, வழக்கமாக தங்களைவிட வலிமை குறைந்த மற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களைத் தங்களைச் சேவிக்கக் வற்புறுத்துவார்கள். விளைவு: வலி, சோகம், கண்ணீர், பாடுகள், அழிவு, அவஸ்தை மற்றும் மரணம்.
சமாதானத்திற்கும், நல்லிணக்கத்திற்குமான தேவனது பிழையற்ற ஆதித் திட்டத்தை அறிவிக்க இயேசு உலகத்திற்கு வந்தார். அதனால்தான், நாம் முதலில் கண்ட வேதபகுதியில் சொல்லப்பட்டிருக்கும் விதமாக அவர் தனது போதக ஊழியத்தைத் தொடங்கினார். தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், 19. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், [ஏசாயா 61:1-2]
ஏறத்தாழ 3 வருடங்களுக்குப்பின், தான் சர்வவல்லமையும் அதிகாரமும்படைத்தச் சிருஷ்டிகர்த்தாவாக இருந்தும், அந்த நாளில் வலிமைபடைத்தவர்களாக இருந்த மதத்தலைவர்களுடைய பொல்லாத நோக்கத்தைற்கு, இயேசு தாமாக முன்வத்து தம்மை ஒப்படைத்து, தம்முடைய போதக ஊழியத்தை நிறைவு செய்தார். அவர்களைத் தம்மை கைது செய்து, அவமானப்படுத்தவும், சித்திரவதை செய்யவும், மேல் உமிழவும், தூஷணம் செய்யவும், சிலுவையில் அறையவும் அனுமதித்து, தம்முடைய சரீர மரணத்தை அடைந்தார்.
இயேசுவுக்கு, எல்லா வல்லமையும் இருந்தால், அவர் ஏன் அந்த அவமானம், கொடூரம், மரணம் எல்லாம் நிகழ அனுமதித்தார்? விடை மிகவும் எளிமையானது, ஆனால் உலகத்திலேயே மிகவும் வல்லமை படைத்தது: அன்பு!
- யோவான் 3: 14. … மனுஷகுமாரனும், 15. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். [சிலுவையில் அறையப்படவேண்டும்] 16. தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
எல்லாருக்கும் வேலை செய்யும் வேலைக்காரன் ஆகும்படி, தமது மரணம் நிகழ இயேசு அனுமதித்து, நாம் நம்முடைய பாவங்களுக்குக் கொடுக்கவேண்டிய விலையை அவரே கொடுக்கும்படி, பாவத்தில் தொலைந்துபோன மனுக்குலத்திற்காக, சிலுவையில் மரித்தார்.
மனிதரை பாவத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவும், தேவனை விட்டுப் பிரிந்தவர்களாவும் வைத்திருக்கும்படியான பிசாசினுடைய திட்டத்தை இயேசுவின் மரணம் அழித்தது.
- எபிரெயர் 2: 13. நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.
14. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், 15. ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
ஏசாயா 61-இல் முன்னுரைக்கப்பட்ட அவருடைய அறிவிப்பை இயேசுவின் மரணம் நிறைவேற்றியது. தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்,
எல்லா மனிதரும் இந்தச் “சிறைப்பட்ட” வகைகளில் அடங்குகிறார்கள். இயேசு வந்து, எல்லா வகையான உறவுகளுக்கும் தேவனுடைய சித்தத்தை அறிவித்தபோது, குறிப்பாகப் பெண்கள் பாவம் இந்த உலகத்திற்குள் கொண்டுவந்த கொடுமையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு உயர்த்தப்பட்டனர். இயேசு பெண்கள் ஆண்களுக்குச் சமமான மதிப்புடையவர்கள் என்று தெளிவாக அறிவித்தார். தேவன் எல்லா மனிதரையும் ஏற்றத்தாழ்வின்றி சமமாக நேசிக்கிறார் என்பதையும் அறிவித்தார். மேலும் நேர்த்தியான நீதிபதியாக, மற்றவருக்குக் கொடுமை செய்யும் ஆணின்மேலும், பெண்ணின்மேலும், தேவனுடைய கோபம் நியாயமானபடி ஊற்றப்படும் என்று இயேசு அறிவித்தார்.
– மாற்கு 12: 30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. 31. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
நம்முடைய முதல் கேள்விக்கு இது எப்படி விளக்கமளிக்கிறது? கிறிஸ்தவத்தில் பெண்களின் மதிப்பு என்ன?
பதில்: ஆதாமும், ஏவாளும், பாவம் செய்ததிலிருந்து எல்லா மனிதரும் கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். இருந்தாலும், ஆதியாகமம் 3-இல் தேவனுடைய தீர்ப்பு கொடுக்கப்பட்டதிலிருந்து, பிசாசினுடைய வெறுப்பிற்கும், கோபத்திற்கும் பெண்கள் பிரத்தியேகமான இலக்காகிவிட்டது போலவே தோன்றுகிறது.
- ஆதியாகமம் 3:14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
பாவம் நிறைந்த ஆண்களையும், பெண்களையும் தம்மோடே ஒரே அன்புள்ள குடும்பமாக ஒப்புரவாக்கிக்கொள்ளும் தேவனுடைய திட்டத்தில் இயேசுவைப் பற்றிய முதல் பிரகடனம் இது. இந்த ஒப்புரவாக்குதல், மீட்பு மற்றும் இரட்சிப்பு ஒரு பெண்ணின் வித்தின் வழியாக நிறைவேற்றப்படும்.
உயிரின் வித்தை உடையவனாக ஆணே படைக்கப்பட்டான் என்று நமக்குத் தெரியும். எனவே, பெண்ணின் வித்து என்பது தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்பட்டப் படைப்பாக இருக்கவேண்டும். அதன்மூலமாக, தேவனும் மனிதனுமான இயேசு கிறிஸ்து ஒரு கன்னியின் வயிற்றில் பிறக்கவேண்டும்.
கருத்துரை: பிசாசு இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அந்த நேரத்திலிருந்து முழு மனுக்குலத்தையும் அழிப்பதற்கும், அதிலும் குறிப்பாக பெண்கள்மேள் உச்சபட்சமான வெறுப்பைக் கொட்டவும், உறுதியாக முடிவெடுத்தது போலவே தோன்றுகிறது. மனுக்குலத்தின் மீட்புக்கான தேவனுடைய திட்டத்தைக் கெடுக்க முயற்சித்து, தன்மேல் தேவனுடைய இறுதியான நியாயத்தீர்ப்பு வருவதைத் தடுக்க பிசாசு செய்துகொண்டிருக்கும் வீணான முயற்சியில் அவன் மேற்கூறிய காரியங்களைத் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருக்கிறான்.
சிறைப்பட்டவர்களை விடுதலையாக்க இயேசு வந்தார். நாம் எல்லாருமே நம்முடைய பாவம் நிறைந்த இருதயங்களுக்குச் சிறைப்பட்டவர்கள்தான். பிசாசின் மிகக் கொடூரமான தாக்குதல், உடல்வலிமை குறைந்த பெண்கள்மேல் ஊற்றப்படுவதுபோலத் தோன்றுகிறது.
சிறைப்பட்டவர்களை விடுதலையாக்க இயேசு வந்தார். நாம் எல்லாருமே நம்முடைய பாவம் நிறைந்த இருதயங்களுக்குச் சிறைப்பட்டவர்கள்தான். பிசாசின் மிகக் கொடூரமான தாக்குதல், உடல்வலிமை குறைந்த பெண்கள்மேலும் சிறுவர்கள்மேலும் ஊற்றப்படுவதுபோலத் தோன்றுகிறது. அவன் பாவம் நிறைந்த ஆண்களுக்கு, பெண்களும், சிறுவர்களும் உபயோகப்படுத்த்ப்படும் பொருள்கள் அல்லது ருசித்து அனுபவிக்கப்படும் உணவுகள் போன்றவர்கள் மட்டுமே என்ற தீமையான எண்ணத்தைக் கற்றுக்கொடுக்கிறான்.
இயேசு [வேறு வார்த்தைகளில்], “இல்லை! அப்படி ஒருக்காலும் இல்லாமலிருக்கட்டும்!” என்று சொன்னார். அதன்பின் இயேசு பெண்களுக்குத் தமது அன்பையும், மரியாதையையும் முன்னுதாரணமாகக் காட்டத் தொடங்கினார். லூக்கா புத்தகத்தை [லூக்கா 7:36 – 50 இதைப்பற்றிக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்க ஒரு நல்ல பகுதி] மட்டுமே ஒருவர் வாசித்தால், இயேசுவின் வாழ்விலும், ஊழியத்திலும், பிரத்தியேகமான, பாதுகாக்கப்பட்ட, மதிக்கப்பட்ட இடத்தைக் கொண்டிருந்த பெண்களுக்கு உதாரணத்தின்பின் உதாரணமாக அநேகரைக் காணலாம்.
இயேசுவின்மேல் அன்பைப் பொழிந்தவர்களுக்கு மிகப் பெரிய உதாரணங்கள் பெண்களே. இயேசு சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கி, பெண்மையை உய்ர்ந்த இடத்தில் வைத்ததற்குத் தெளிவான உதாரணமாக, அவருடைய மரணத்தின்போது, [லூக்கா 24; மத்தேயு 27:55 – 56, 28:1 – 10; மாற்கு 15; யோவான் 20] அவருடைய சிலுவையைச் சுற்றி அவரோடு நின்றவர்கள் சில பெண்களே என்ற உண்மையைக் கூறலாம். எல்லா ஆண்களும் அவரைவிட்டு ஓடியபோது, அவருக்கு ஆறுதலாக அவரோடு நின்றவர்கள் பெண்களே. நெருங்கி வந்துகொண்டிருந்த அவருடைய மரணத்திற்கும், அடக்கத்திற்கும் அடையாளமாக, விலையுயர்ந்த வாசனை தைலத்தை அவர்மீது ஊற்றித் தியாகம் செய்தது ஒரு பெண்ணே. இயேசு பெண்மையின்மீது வைக்கும உயர்ந்த மதிப்பின் மிக உறுதியான உதாரணமாக, நாமெல்லாரும் நித்தியமாக அவரோடு வாழப்போவதற்கு அடிப்படையான அவர் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்த நற்செய்தி பெண்களிடம் கொடுக்கப்பட்டது என்பதைக் கூறலாம்.
அந்தக் கணத்திலிருந்து இன்றுவரை, இயேசுவுக்கும், முழு கிறிஸ்தவத்திற்கும் எவ்வளவு முக்கியத்துவமும். மதிப்பும் உடையவர்கள் பெண்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமலிருப்பது, முடியாத ஒரு காரியம்.
- கலாத்தியர் 3: 7. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. 28. யூதனென்றும் [யூதனல்லாதவன்] கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். 29. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.
தேவனுக்கு இரண்டாந்தரமான பிள்ளைகள் இல்லை! முழு படைப்பின்மேலும், இயேசு கிறிஸ்துவுடனே சேர்ந்து நாமெல்லாரும் உரிமையாளர்களாய் இருக்கிறோம். பிறப்பினாலே, ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். இயேசு நியாமாக தனக்குச் சொந்தமாக மீண்டும் விலைகொடுத்து வாங்கி இருப்பதை, அவரிடம் திரும்பக் கொடுப்போமாக. அது, நமது வாழ்வும், அவரை மகிமைப்படுத்தும்படி நாம் பயன்படுத்துகின்ற, அவரால் நமது கரங்களில் கொடுக்கப்பட்ட அனைத்துக் காரியங்களுமாகும்.
எங்களுடைய இந்தக் காணொளியைப் பார்க்கக் கொஞ்சம் நேரம் செலவிடுமாறு பரிந்துரைக்கிறோம். BrokenHearts,CostlyPerfumeandTears அதைப் பார்த்தபின், தனக்காகவும், தன்னுடைய இராஜ்ஜியத்திற்காகவும் எவ்வளவு மதிப்பை இயேசு பெண்கள்மேல் வைத்திருக்கிறார் என்பதின்மேல் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வர வாய்ப்பில்லை.