“முடிந்தது!” இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன?
யோவான் 19:28-30 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் [இயேசுவின் மாமிச உடல் மரித்தது]..
பதில்: இயேசு மரிப்பதற்கு முன்னே கடைசி தருணத்தில் சொன்னார், “முடிந்தது!”
இந்த வார்த்தை இயேசு தமது உலக வாழ்க்கையின் அடிப்படை நோக்கத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார் என்று சாட்சியிடுகிறது. குற்றமுள்ள, பாவத்தால் சீரழிந்து போன மனுக்குலத்திற்குப் பதிலீடாக மரிப்பதற்கு இயேசுவை இந்த உலகத்திற்குச் செல்லுமாறு சொன்ன பிதாவின் சித்தத்தைச் செய்து முடித்துவிட்டார்.
இந்த “முடிந்தது” என்ற வார்த்தை யாருக்கெல்லாம் பொருந்தும்? விசுவாசம், மனந்திரும்புதல் என்ற தேவனுடைய நற்கொடைகளைப் ஏற்றுக்கொள்வதன்மூலம் தங்களுக்குள் கிறிஸ்துவின் ஜீவன் பிறக்கும் பேறைப் பெறுகின்ற எந்த மனிதனுடைய பாவக் கடனையும் இயேசு தீர்த்துவிட்டார்.
இயேசுவை விசுவாசித்து அவரைத் தங்கள் ஆண்டவரும், இரட்சகருமாக ஏற்று, அவரைப் பின்பற்றத் தங்களை ஒப்புக்கொடுக்கும் எவருக்கும், அவர்கள் யூதரானாலும், புறஜாதியாரானாலும், மனந்திரும்பும் வரத்தைப் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கிறார்.
யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் [என்றார்].
மார்த்தாள் விசுவாசித்தாள்
- யோவான் 11:23-27 இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
இயேசு தமது சொந்த மரணம் மூலமாக மனுக்குலத்தின் மிகப் பெரிய பயமாகிய மரண பயத்தைத் தோற்கடித்தார் – அதாவது மரித்து, நித்திய காலமாக பரிசுத்த தேவனிடமிருந்து பிரிக்கப்படுவோமென்ற மனிதரெல்லாருக்குமுள்ளே இருக்கும் பயம். தமது மரணம் மூலமாக இயேசு மரணத்தை வென்று, மரண பயத்தைப் பயன்படுத்தி எல்லா மனிதரையும் கலங்கச் செய்துகொண்டிருந்த சாத்தானையும் வென்றார்.
- எபிரெயர் 2:14-15 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
இயேசு மரித்ததும் அவருடைய விலா குத்தப்பட்டது.
- யோவான் 19:31-37 அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான். அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
யோசேப்புக்குச் சொந்தமான கல்லறையில் இயேசு அடக்கம்பண்ணப்பட்டார்.
– யோவான் 19:38-42 இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான். ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
இயேசுவின் மரணமும், உயிர்த்தெழுதலும், இஸ்ரவேல் நாடு முழுவதும் பறைசாற்றப்படுகிறது. கிறிஸ்துவின் மரணத்துக்கும், உயிர்த்தெழுதலுக்கும் பேதுரு சாட்சி கொடுக்கிறார்.
– அப்போஸ்தலர் 4:10 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
ஏறத்தாழ 2000 ஆண்டுகளாக, இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றி விவரிக்கும் பல்வேறு புத்தகப் பகுதிகள் இயேசுவின் பக்கம் சேர்ந்தவர்களாலும், அவருடைய எதிரிகளாலும் ஆழமான ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டிருக்கின்றன. பெரும்பான்மையான மதம் சார்ந்த, மற்றும் மதம் சாராத புத்தகங்களால் கொடுக்கப்படும் முடிவு: இயேசு கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலுமே, பதிவு செய்யப்பட்ட சரித்திரத்திலேயே அதிகபட்ச ஆதாரங்களைக் கொண்ட நிகழ்ச்சியாகும்.
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுகளிலிருந்து நாம் கண்டறிவது:
இயேசுவின் உடல் கல்லறையிலேயே இருப்பதை உறுதி செய்யும் முயற்சியாக பிலாத்து ஒரு காவலாளியை வைக்கிறான்.
– மத்தேயு 27:62-66 62. ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிட வேண்டும் என்றார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான். அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.
இருந்தாலும், மூன்று நாட்களுக்குப் பிறகு உயிரோடு எழுந்த ஆண்டவரைச் சில பெண்கள் தொழுதுகொள்வதைக் காண்கிறோம்.
– மத்தேயு 28:5-10 5. தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
அதிகாரிகளால் போர்வீரர்களுக்குப் பொய்சொல்லும்படி இலஞ்சம் கொடுக்கப்படுகிறது.
– மத்தேயு 28:11-15 அவர்கள் போகையில், காவல் சேவகரில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள். இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து: நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள். அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.
கிறிஸ்து உயிரோடு எழுந்து ஐம்பதாவது நாளில், பேதுரு வெளிப்படையாக எருசலேம் முழுவதும் உள்ள மக்களுக்கு உயிரோடு எழுந்த கிறிஸ்துவை அறிவிக்கிறார்.
– அப்போஸ்தலர் 2:22-24, 33 இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது… அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
அநேக இஸ்ரவேலர்கள் விசுவாசிக்கிறார்கள்.
– அப்போஸ்தலர் 2: 36-39, 47 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;… தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.
இயேசு கிறீஸ்து ஒரு குறைவற்ற வாழ்வை வாழ்ந்து, ஒரு குறைவற்ற மரணத்தை அடைந்தார். அதற்குப்பின் அவருடைய பிதா, அவரை உயிரோடு எழுப்பிய செயல், தேவன் இயேசுவின் வாழ்க்கையை அங்கீகரித்தார் என்றும், அவருடைய மரணத்தை மனிதர்களுடைய பாவங்களுக்கான பதிலீடாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரே பரிகாரமாக அங்கீகரித்தார் என்றும் விளக்கிக் காட்டுகிறது. அப்பழுக்கற்றவரும், பரிசுத்தரும், நீதியுள்ளவருமாகிய தேவன் இயேசுவின் வாழ்வையும், மரணத்தையும், நம்முடைய இடத்தில் ஒரே ஒரு நிபந்தனையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வார் என்று அறிவித்திருக்கிறார். அந்த நிபந்தனை தேவனுடைய அன்பின் குமாரனாகிய இயேசு கிறீஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து, இயேசுவைப் பின்பற்றுபவராக மாறும் விருப்பத்தைத் தெரிவிக்கும் ஒரே ஒரு செயலை நாம் செய்யவேண்டும் என்பதே.
இஸ்ரவேலரைத் தவிர வேறு யாருக்காக இயேசு மரித்தார்? அநேகம் புறஜாதியினரும் விசுவாசித்தார்கள்.
– ரோமர் 3:29 தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.
- அப்போஸ்தலர் 2:21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.
- யோவான் 6:38-40 என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. என்றார்.
எல்லா மனிதர்களும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்ளவோ, நிராகரிக்கவோ தேர்ந்தெடுக்கக்கூடிய “சுயசித்தம்” உள்ளவர்களாகப் பிறந்திருக்கிறார்கள். கிறிஸ்துவை நிராகரிப்பவர்களுக்கு அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலால் ஒரு பயனும் இராது. அதற்குப் பதிலாக, அவர்கள் நியாயத்தீர்ப்பின் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனுக்கு முன்பாக நிற்கும்போது, தேவனால் நித்தியமாக நிராகரிக்கப்பட்டு முடிவில்லாத தண்டனையை அவர்கள் அடைவார்கள் என்ற உண்மையைக் காட்டும் நிகழ்ச்சியாகவே இயேசுவின் மரணமும், உயிர்த்தெழுதலும் இருக்கும்.-
– வெளி 20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். 15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
இயேசுவின் கடைசி வார்த்தை, “முடிந்தது!” இதுவரை பிறந்த ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்மையாக என்ன காரியம் செய்து முடிக்கப்பட்டது? நித்திய இரட்சிப்பு அல்லது நித்திய தண்டனை, இந்த இரண்டில் ஒன்று செய்து முடிக்கப்பட்டது.
உண்மை: மார்த்தாளுக்கும், பேதுரு இயேசுவைப் பற்றிய உண்மையை அறிவித்தபோது, அதை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட யூதர்களுக்கும், இயேசுவின் மரணம் உண்மையில் இரட்சிக்கும் செயலாகச் செய்துமுடிக்கப்பட்டது. இயேசுவின்மேல் விசுவாசம் வைத்து, அவரை பின்பற்றுபவர்களாக மாறுவதன்மூலம் மட்டுமே இரட்சிக்கும் விசுவாசத்தோடு இயேசுவை ஏற்றுக்கொண்ட புறஜாதியினர் அநேகருக்கும் இயேசுவின் மரணம் இரட்சிப்பின் பணியை நிறைவேற்றியது… ஆனால், துயரப்படத்தக்க விதத்தில், பெரும்பான்மையினருக்கு, அது அவர்களை நித்திய தண்டனைக்குள்ளாக்கும் ஒரு செயலாக செய்து முடிக்கப்பட்டது. பரிசுத்த தேவனால் நியாயத்தீர்ப்பின் பெரிய வெள்ளைச் சிங்காசனத்திற்கு முன்பாக அவர்களது இறுதித் தீர்ப்பு கொடுக்கப்பட்டபின், இந்த பூமியில் வாழும்போது இயேசுவை நிராகரித்தவர்கள் எல்லாரும் அக்கினிக் கடலாகிய நித்திய நரகத்திற்குள் தள்ளப்படுவார்கள். இந்த நித்திய ஆத்துமாக்களுக்கு, வேதனை குறையவே செய்யாது. கவலை, வேதனை, அவதி மற்றும் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்படுதல் ஆகியவை கிறிஸ்துவை நிராகரித்தவர்களுக்கு முடிவே இல்லாமல் நித்திய காலமாக இருக்கும்.
இயேசுவை ஆண்டவராகவும், இரட்சகராகவும், விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுவீர்களா? அல்லது இயேசுவின் மரணம் உங்களுக்குப் பயனற்றதாகிவிட்டது என்று உங்களைப்பற்றிச் சொல்லப்படுமா?
எளிமையான விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், தங்கள் வாழ்வைத் தங்கள் உண்மையுள்ள சிருஷ்டிகருக்குத் திரும்பக் கொடுத்து, அவர்களை முழுவதுமாக நேசிக்கும் இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கு, அவர்களுடைய முடிவு இப்படியாக இருக்கும்:
– வெளி 21:3–5 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
TheLoveofGodhttps://vimeo.com/912288970
IBELIEVE!https://wasitforme.com/i-believe/
எல்லோருக்கும் எங்கள் முழு அன்பையும் தெரிவிக்கிறோம்.
கிறிஸ்துவில்,
Jon+ Philis+ Friends@ WasItForMe.com