திரித்துவம் என்பது என்ன?
பதில்: தேவன் கடந்த காலங்களில் மனிதனுக்குத் தம்மை வெளிப்படுத்தினார். இன்று வரையும் அவர் தொடர்ந்து தம்முடைய அன்புக்கிரிய தமது சிருஷ்டிகளுக்குத் தம்மை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறார். நம்முடைய நித்தியமான ஆத்துமாக்களின் இரட்சிப்புக்கு அவரைப்பற்றி நாம் கட்டாயம் அறிந்து இருக்கவேண்டிய முக்கியமான காரியங்களை நாம் முழுவதுமாகப் புரிந்துகொள்ளமுடியும் என்று தேவன் உறுதி செய்திருக்கிறார்.
இந்த மறுக்கமுடியாத, உடைக்கமுடியாத உண்மை உறுதியாக நமது இருதயங்களிலும், மனங்களிலும் பதிக்கப்பட்ட நிலையில், ஒரு பெரிய உண்மையய் எப்படியும் புரிந்துகொள்ள முயற்சிப்பவர்களாக நாம் வைக்கப்பட்டிருக்கிறோம்.
ஒரு வரம்புக்குட்பட்ட மனிதர்களாகிய நாம், எல்லையற்ற கடவுளைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பும் எல்லாவற்றையும் புரிந்துகொள்வது இயலாத காரியம். இது ஒரு உண்மை. ஏனென்றால், தேவனை அறிந்துகொள்வதற்கு ஒரு அணைக்கமுடியாத ஆசையுடன் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம், ஆனால் நமக்கு ஒரு வரம்புக்குட்பட்ட திறனே இருக்கிறது. புரிந்துகொள்வதற்கான நம்முடைய திறன் ஒரு வரம்புக்குட்பட்டிருக்கிறபடியால், அப்படிப்பட்ட சிருஷ்டிகளாகிய நாம் எல்லையற்ற ஒரு காரியத்தைப் புரிந்துகொள்ளவே முடியாது.
தேவனுக்கும் அவருடைய சிருஷ்டிகளுக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கிறது. அது எப்போதும் இருக்கும்.
சாதாரண, கையில் வைத்திருக்கக்கூடிய ஒரு கணக்குப்பொறி, 2 + 2 = 4 போன்ற அடிப்படையான காரியங்களைக் கணக்கிடும் திறன் மட்டுமே உடையது. அதற்கு ஒரு ராக்கெட்டைச் சந்திரனில் கொண்டுபோய் தரையிரக்குவதற்கான, கடினமான வாய்ப்பாடுகளைத் துல்லியமாகக் கணக்கிடக்கூடிய திறன் கிடையாது. அந்த எளிய க்ணக்குப்பொறி ராக்கெட்டின் பயணத்திற்கான கணக்குகளைச் செய்ய [அந்தக் கணக்குகளைப் புரிந்துகொள்ள] அதீத கணக்குத் திறனைப் பெறுவதற்கு இன்னும் உயர்வான, அதிக நுணுக்கமான திறன் அதற்குத் தேவைப்படுகிறது.
இந்தச் சிறிய உதாரணம் சக்தி குறைந்தாக இருக்கிறது, ஆனால் ஒருவேளை எல்லையற்ற ஒன்றிற்கும், எல்லைக்குள் அடங்கிய ஒன்றிற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை விளக்குவதற்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கும்.
நமது சிருஷ்டிகரான தேவன், அவருடைய குறைவற்ற அளவற்ற ஞானத்திலே மனிதனை கற்றுகொள்வதற்கும், காரியங்களைச் சாதிப்பதற்கும் வியக்கத்தக்க சக்தி உள்ளவனாக மனிதனைச் சிருஷ்டித்தார். உடல், ஆத்துமா, ஆவி என்ற மூன்று பாகங்களைக் கொண்டவனாக தேவன் மனிதனைச் சிருஷ்டித்தார்.”நித்தியமான” ஆத்துமாவும், ஆவியும், “தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இடமாக” உடல் சிருஷ்டிக்கப்பட்டது. இப்படியாக, தொடக்கூடிய “பொருள்” உடைய மற்றும் “பொருளற்ற” பகுதிகள் இரண்டும் சேர்ந்தவர்களாக நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். பொருளாலான பகுதிகள் முதலில் “எல்லைக்குட்பட்டதாக” சிருஷ்டிக்கப்பட்டன. ஆனால், அதாமும், ஏவாளும் தங்கள் சிருஷ்டிகரை நேசித்து, அவருக்குக் கீழ்ப்படிய எடுக்கும் முடிவைப் பொறுத்து, அந்தப் பகுதிகள் “எல்லையற்றவையாக” மாறக்கூடிய திறனுடையவைகளாகச் சிருஷ்டிக்கப்பட்டன.
வருந்தத்தக்க விதமாக, தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருக்க முடிவெடுத்து, தங்களுடைய சந்ததி முழுவதற்கும் தீமை விளைவித்தார்கள். அதனால் உருவான “பாவக் கிருமி” உடனடியாக அவர்களுடைய உடலையும் ஆத்துமாவையும் தாக்கியது. இந்தப் பாவக் கிருமியின் தாக்குதல், தேவன் முதலிலேயே ஆதாமிடமும் ஏவாளிடமும் எச்சரித்துச் சொல்லிய, அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போனால், அதன் விளைவு “நீ சாகவே சாவாய்” (ஆதி 2:17) என்ற விதியைச் செயல்படுத்தியது. சாவு என்பதன் பொருள் அவர்கள் உடல்கள் மண்ணுக்குத் திரும்பும், அவர்கள் ஆத்துமாக்களும், ஆவிகளும் பரிசுத்த தேவனிடமிருந்து நித்தியமாக பிரிக்கப்படும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும் என்பதாகும்.
அவர்களுடைய பொருளற்ற பகுதிகளாகிய ஆவி மற்றும் ஆத்துமாவின் கதி என்ன? தேவன் ஆத்துமாவையும், ஆவியையும் “தன்னுடைய சாயலில்” நித்தியமாக இருக்கும்படிப் படைத்தார். சரித்திரத்திலேயே, மிகப்பெரிய அன்பின் கதையை நிறைவு செய்ய, விழுந்துபோன, பாவம் நிறைந்த மனுக்குலத்தை, மீட்டு, மீண்டும் தன்னோடே ஒப்புரவாக்கிக்கொள்வதற்கான தம்முடைய நித்திய திட்டத்தை தேவன் செயல்படுத்தத் தொடங்கினார். இது எப்படி நிறைவேற்றப்பட்டது?
எல்லையற்ற சிருஷ்டி கர்த்தாவாகிய குமாரனாகிய தேவன், மனித உடலைக் கொண்டவராக, ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்து, இந்த உலகத்திற்கு வந்து, ஒரு அப்பழுக்கற்ற மனிதனாக, பிதாவாகிய தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவராக ஒரு அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்தார். மனுக்குலத்தின் பாவங்களுக்கு நியாயப்படிக் கொடுக்கப்படவேண்டிய விலையாக, தாமாக முன்வந்து தன்னை மரணத்திற்கு ஒப்படைத்தார். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரிடம் அன்புகூரும் எளிய செய்லைச் செய்யும் எல்லா மனிதருக்கும் இந்தப் பரிசு கிடைக்கிறது.
மேலே சொல்லப்பட்ட பெரிய உண்மைகள் நமது மனித சிந்தனைக்கு எட்டாதவைகளாக இருக்கின்றன. ஏன்? ஏனென்றால் மனிதர்கள் ஒரு வரம்புக்குட்பட்ட அறிவுத் திறனே உடையவர்களாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். அடிப்படையில் நாமெல்லாரும் கையில் வைத்திருக்கக்கூடிய கணக்குபொறி போல மிகச் சிறிய வரம்புக்குட்பட்ட அறிவுடையவர்களாக இருக்கிறோம். நாம் எப்பொழுதும் தேவனாக முடியாது! சர்வ வல்லமையும், சர்வ ஞானமும் படைத்தவராக எங்கும் வியாபித்திருக்கும் ஒரே ஒருவரான, நமது சிருஷ்டிகராகிய தேவனுடைய, எல்லையற்ற நித்திய தன்மைகளை நம்மால் ஒரு போதும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது.
ஆனால், மனிதர்கள் தங்கள் சிருஷ்டிகரை அறிந்துகொள்ள விரும்புகிறவர்களாகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றனர்! எலா மனிதருக்கும் தேவனை அறிந்துகொள்வதற்கான ஒரு “பசியும், தாகமும்” கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பசியோடும், தாகத்தோடும், தேவனை முழுமையாக அறிந்துகொள்ளமுடியாது என்ற உண்மையை நாம் உடனடியாகப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறோம். வரம்புக்குட்பட்டவர்களால் எல்லையற்ற ஒன்றைப் புரிந்துகொள்ளமுடியாது என்பதால், எல்லைய்ற்ற தேவனுக்கு, தம்மைப்பற்றித் தாம் மட்டுமே அரிந்துகொள்ளக் கூடிய சில தன்மைகள் இருக்கவேண்டும்.
நம்முடைய குழந்தைப் பருவ நாட்களிலேயே தேவனைப் புரிந்துகொள்ள விரும்பும் பசி தொடங்குகிறது. நாம் வானத்தைப் பார்த்துக் கேட்கிறோம், “அப்பா, அது எப்படி முடிவில்லாத விண்வெளியில் எண்ணிக்கைக்கு அடங்காத நட்சத்திரங்கள் இருக்கமுடியும்?” இன்னும் அதிகமான அறியமுடியாத புதிர்கள் தொடர்ந்து நம்மேல் திணிக்கப்படுகிறது.”எப்படிக் குழந்தைகள் உருவாகிகின்றன?” “அவை எப்படி இல்லாமையிலிருந்து இருக்கும் நிலைக்கு வருகின்றன? அது நடப்பதற்கு எண்ணிக்கைக்கு அடங்காத கோடான கோடி நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடக்கவேண்டியது அவசியமாயிருக்கும்போது அது எப்படி சாத்தியம்?” “எப்படி எல்லா மனிதருடைய கைவிரல் ரேகைகளில் எந்த இரண்டும் ஒரே மாதிரி இருப்பதில்லை? அதற்கு முடிவில்லாத எண்ணிக்கை உள்ள விரல் ரேகைகள் தேவையாயிற்றே” “எந்த இரண்டு பனித்துணுக்குகளும் ஒரே மாதிரி இல்லாதபடி பனித்துணுக்குகளில் எப்படி எண்ணிக்கைக்கு அடங்காத வகைகள் இருக்கமுடியும்?” “எப்படி வண்ணத்துப்பூச்சியின் புழு, தன்னைத் தானே மூடிக்கொண்டு மரித்து, பின் முற்றிலும் வித்தியாசமான வண்ணத்துப்பூச்சியாக மாறி வெளிவருகிறது?” இதுபோன்ற இன்னும் பல கேள்விகள்.
தேவன் இந்தக் கணக்கற்ற மர்மங்களை ஒரு காரணத்திற்காக வடிவமைத்தார். தமது சிருஷ்டியான மனிதனுக்குத் தம்மை வெளிப்படுத்தி, மனிதர்கள் “தம்மை அறிய விரும்பி” அன்போடும், ஆராதனையோடும் “தம்மைத் தேடி வரும்படி” அப்படிச் செய்தார்.
திரித்துவத்தைப் பற்றி உங்கள் கேள்விக்கு பதிலைத் தயார் செய்யும்படி இந்த முகவுரையைத் தேர்ந்தெடுத்தோம். நித்தியமானவராக, அநாதியானவராக, சிருஷ்டிக்கப்படாதவராக, சர்வ அதிகாரமும் படைத்தவராக, அண்டசராசரத்தை ஆளும் தேவன் “இருக்கிறவராக இருக்கிறேன்!” (யாத் 3:14) என்று அறிவித்திருக்கிறார். தேவன் மூன்று பிரிக்கமுடியாத பகுதிகளைக் கொண்டவராக இருக்கிறார்;
இந்தக் காரியம் வரம்புக்குட்பட்ட நமது அறிவினால் புரிந்துகொள்ள முடியாதது ஏனென்றால் நம்முடைய அறிவின் வரையறைகளால் அது அறிய முடியாத்தாக இருக்கிறது. இந்தக் காரியம் உண்மை ஏனென்றால் அது உண்மை என்று தேவன் அறிவித்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசமாகிய வரத்தின் மூலமே இந்த அறிவைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
ஒரு மனிதன் இயேசு கிறீஸ்துவை விசுவாசித்து அவரைத் தன் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, இயேசு அந்த மனிதனுடைய நண்பராகி, அந்த மனிதனுக்குள் வசிக்கும்படித் தன் பரிசுத்த ஆவியை அனுப்பி, தேவன் உண்மைகளென்று வெளிப்படுத்தி, நாம் பின்பற்ற வேண்டிய காரியங்களை விசுவாசிக்க அந்த மனிதனுக்குத் திறனைக் கொடுக்கிறார்.
நாம் புரிந்துகொள்ள அவசியமான மிக முக்கியமான உண்மைகளை முதலில் பார்ப்போம். சர்வவல்லமை படைத்த, நித்தியமான, சர்வஞானம் படைத்த, எங்கும் வியாபித்திருக்கும் பரிசுத்த தேவனைப்பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடிந்த அநேகக் காரியங்கள் இருக்கின்றன.
நாம் புரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கியமானவைகளில் ஒன்று, தொலைந்துபோன/இழக்கப்பட்டுப்போன நம்பிக்கையற்ற மனுக்குலதிற்கான தேவனுடைய மீட்பின்/இரட்சிப்பின் திட்டமாகும். இழக்கப்பட்டுப்போன நித்தியமான ஆத்துமாக்களை மீண்டும் அவர்களது சிருஷ்டிகரது அன்பின் நித்திய அரவணைப்பிற்குள் கொண்டுவரும் மீட்பு/இரட்சிப்பு, அவரது சிருஷ்டிகளிடமிருந்து எந்த உதவியும் இன்றி தேவனால் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.
மீட்பு = பாவம் நிறைந்த மனுக்குலத்தை பரிசுத்த தேவனிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்ப்பதற்குக் கொடுக்கப்பட்ட விலையானது, ஏறத்தாழ 2000 வருடங்களுக்குமுன் எருசலேமுக்கு வெளியே கல்வாரி என்று அழைக்கப்ப்ட்ட சிறிய குன்றின்மீது, குமாரனாகிய தேவன் சிலுவையில் அடைந்த மரணமாகும். -இந்த மீட்பின் விலையானது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய தேவனுடைய இருதயத்திலிருந்து மனுக்குலத்திற்குக் கொடுக்கப்பட்டது. பிதாவாகிய தேவனுடைய இந்த அன்பு, அவரது அன்பும், இரக்கமும் நிறைந்த எல்லையற்ற இருதயத்திலிருந்து ஊற்றைப்போல பொங்கி வழிந்து, பரிசுத்த ஆவியாகிய தேவன் கொடுத்த வல்லமையின் மூலமாக, குமாரனாகிய தேவனால் நிறைவேற்றப்பட்டது.
- எபிரெயர் 9:14. நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! 15. ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.
இரட்சிப்பு = விசுவாசத்தினால் பெற்றுக்கொள்ளப்படும் மீட்பு! இரட்சிப்பு என்பது நாம் இருதயம் என்று அழைக்கும் நம்முடைய உள்ளங்களின் மிக ஆழமான இடத்தில் நடைபெற்று, அங்கே உணரப்படும்/அறியப்படும் ஒன்று.
- எபிரெயர் 11:1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
- எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
நாம் திரித்துவம் என்று அழைக்கும் ஒருவரில் மூவராக விளங்கும் பரிசுத்த தேவனால் தொடங்கப்பட்டு, முடிக்கப்பட்ட, இழக்கப்பட்டுபோன மனுக்குலத்தின் மீட்பையும், இரட்சிப்பையும் விளக்கி காட்ட இயேசு நமக்கு மூன்று உவமைக் கதைகளைச் சொல்லியிருக்கிறார்.
“தேவனைத் தவிர வேறு யாராலும் செய்ய இயலாத” ஒரு காரியத்தில் பிதா, குமாரன், ஆவி என்னும் பரிசுத்த தேவனின் செயல்பாட்டை இந்த உவமைக் கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. அவர் என்ன செய்தார்? சிருஷ்டிக்கப்படாத தேவன் த்ம்மை எதிர்த்து நின்ற பாவம் நிறைந்த சிருஷ்டிகளுக்காக மரித்து, அவர்களை மீண்டும் தன்னோடு சேர்த்துக்கொண்டார். இது பரிசுத்த ஆவியாகிய தேவனுடய வல்லமையினால் குமாரனாகிய தேவன் சிலுவையில் கொடுத்த இரத்தபலியால் நிறைவேற்றப்பட்டது.
இயேசு தமது வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் இவ்வாறு விளக்கினார், [வேறு வார்த்தைகளில்] “இதனால் தான் நான் பாவிகளோடு சாப்பிடுகிறேன். நானே தேவனுடைய குமாரன், என்னுடைய டொலைந்துபோன ஆடுகளைத் தேடும் உண்மையான மேய்ப்பன். என்னுடைய பிதா தொலைந்துபோன தன்னுடைய மகனைத் தேடுகிறார். பரிசுத்த ஆவியானவர் தொலைந்துபோன தன்னுடைய வெள்ளிக் காசைத் தேடுகிறார்.”
பரிசுத்த ஆவியானவரால் இந்த வியக்கத்தக்க கதைகள் நமது இருதயங்களுக்கு விளக்கிக்காட்டப்படும்போது, வரம்புக்குட்பட்ட சிருஷ்டிகளாகிய நாம் திரித்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். பிதா, குமாரன், ஆவியாகிய பரிசுத்த தேவனுடைய அன்பை நாம் இப்போது விளங்கிக்கொள்ளமுடியும்.
தேவனுடைய குமாரன் தெய்வீக பலியாக தன்னையே கொடுத்தார். அதைப் பரிசுத்த ஆவியானவர் எடுத்துக் கொடுக்க, பிதாவாகிய தேவன் அதைப் பெற்றுக்கொண்டார்!
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய “தெய்வீக திரித்துவம்” தொலைந்துபோன மனிதரைத் தேடி, இரட்சிப்பதில் முழுவதுமாக ஒன்றாக இணைந்து முழு ஈடுபாட்டோடு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்!
உங்கள் நித்தியமான ஆத்துமாக்களை இரட்சிக்ககூடிய அவர்களுடைய வல்லமையை விசுவாசத்தின்மூலம் பெற்றனுபவிக்க பரிசுத்த ஆவியானவர் தயவாக இந்தப் பெரிய உண்மைகளை உங்கள் இருதயங்களுக்கு வெளிப்படுத்திக்காட்டவேண்டும் என்பதே எங்கள் ஜெபமாக இருக்கிறது.
தொலைந்துபோன ஆட்டைப் பற்றிய உவமைக் கதை
லூக்கா 15:1. சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். 2. அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். 3. அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது: 4. உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், [தன்னுடைய ஆடுகளை நேசிக்கும் உண்மையான மேய்ப்பராகிய இயேசு] தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? 5. கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, 6. வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? 7. அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
தொலைந்துபோன வெள்ளிக்காசைப் பற்றிய உவமைக் கதை
8. அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ? [உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறவர் பரிசுத்த ஆவியானவர்] 9. கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா? 10. அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
தொலைந்துபோன மகனைப் பற்றிய உவமைக் கதை
11. பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.
12. அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். 13. சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். 14. எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, 15. அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். 16. அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. 17. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். 18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். 19. இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
- எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் [பிதாவாகிய தேவன்] அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
- குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.
- அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23. கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். 24. என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
நித்தியமான எல்லையற்ற காரியங்களைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கும்போது, நம்முடைய சிருஷ்டிகராகிய இயேசுவின் அருகே நெருங்கி நாம் கொண்டுவரப்பட முடியும். இதன்காரணமாக, சிருஷ்டிக்கப்படாதவருக்கும் [தேவன்] அவரது சிருஷ்டிகளுக்கும் [மனித இனம்] இடையே உள்ள “எல்லையற்ற இடைவெளியைப்” புரிந்துகொள்ள கடந்த பல வருடங்களில் எங்களுக்கு உதவிய சில சிந்தனைகளை இங்கே சேர்த்திருக்கிறோம்.
தேவனைத் தேடும் எங்கள் சொந்த முயற்சியில், தேவனிடம் ஆராதனையோடு நெருங்கிச் சேர இந்தச் சிந்தனைகள் எங்களுக்கு உதவி இருக்கின்றன. தேவனுடைய மறைபொருள்களைப் புரிந்துகொள்ள நீங்களும் விடாப்பிடியாக முயற்சி செய்ய உங்களுக்க் உதவி உங்களுக்கு இந்தச் சிந்தனைகள் ஒரு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
எல்லா மறைபொருள்களிலும் மிகப் பெரிய மறைபொருள் நிச்சயம் இதுவாகத் தான் இருக்கும்: “பரிசுத்த தேவனால் என்னை எப்படி நேசிக்க முடியும்? என்னுடைய இயல்பிலும் என்னுடைய சொந்த விருப்பப் படியும் நான் அசுத்தமானவனாகவும், எதிர்த்து நிற்கிறவனாகவும் இருக்கிறேன். என்னுடைய சிருஷ்டிகராகிய பரிசுத்த தேவனை எதிர்த்ததால் நான் நித்தியமான தண்டனைபெறத் தகுதியுள்ளவனாக இருக்கிறேன். எப்படிப் பரிசுத்த தேவன் நான் நியாயமாக என்னுடைய பாவங்களுக்காக பெறவேண்டிய தண்டனையைத் தான் ஏற்றுக்கொண்டு, என்னுடைய இடத்தில் மரிக்கும் அளவுக்கு என்மேல் அன்புகூர முடியும்? ஏன் இயேசு என்னுடைய பாவங்களுக்காக, என்னுடைய இடத்தில் தாமாக முன்வந்து “ஒரு குறிப்பிட்ட நேரம் நித்திய மரணத்தை” ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என்மேல் அன்புகூர வேண்டும்?”
பாவிகளாகிய நாம் மன்னிக்கப்பட்டு, வாழ்வடையும்படி, பாவமறியாத இயேசு பாவிகளுக்காக [நீங்களும், நானும்] மரித்தார்! உண்மையிலேயே இது தான் சரித்திரத்திலேயே மிகப் பெரிய அன்பின் கதை!
“இரட்சகர் மரித்தது எனக்காகவா? ஆம், அது எனக்காகத் தான்!”
புரிந்துகொள்ளமுடியாத இப்படிப்பட்ட அன்பைப் பற்றி அறிந்துகொண்டபின், இந்த அறிவை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் தேவனை விசுவாசித்து, உங்கள் நம்பிக்கையை அவர்மேல் வைத்து அவர்மேல் அன்புகூருவீர்களா? தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தி மரித்துக் கொடுத்த விலையினால் நியாயமாக தமக்குச் சொந்தமாக அவர் வாங்கிக்கொண்ட உங்கள் வாழ்வைத் திரும்ப அவரிடம் கொடுக்க முடிவு செய்வீர்களா?
ஏ. டபிள்யூ. டோசர் ( 1897 – 1963 ) அவர்களால் எழுதப்பட்ட “பரிசுத்தரைப் பற்றிய அறிவு” என்ற நூலிலிருந்து சில பகுதிகள்
ஒருவரும், மூவரும்
ஒளியின்மேல் சிங்காசனமிட்டிருக்கும் எங்கள் பிதாக்களின் தேவனே, இங்கிலாந்தின் மொழியானது எவ்வளவு வளமானதாக, இசை ஒலி போன்றதாக இருக்கிறது! இருந்தாலும் உம்முடைய அதிசயங்களைப்பற்றி நாங்கள் பேச முயற்சி செய்கையில், எங்கள் வார்த்தைகள் எவ்வளவு அற்பமானதாகவும், எங்கள் பேச்சு எவ்வளவு இனிமையற்றதாகவும் இருக்கிறது. ஒருவரில் மூவரான உம்முடைய தேவத்துவமாகிய அச்சமூட்டும் மறைபொருளைப்பற்றி நாங்கள் சிந்திக்கையில் நாங்கள் எங்கள் கைகளினால் எங்கள் வாய்களை மூடிக்கொள்கிறோம், அந்தப் பற்றி எரியும் முட்செடிக்கு முன்பாக, நாங்கள் புரிந்துகொள்ளச் செய்யும்படிக் கேட்காமல், மூன்று நபர்களைக் கொண்ட ஒரே தேவனாகிய உம்மைச் சரியாக ஆராதிக்க உதவுமாறு மட்டும் கேட்கிறோம். ஆமென்.
அறிவுக்கெட்டாத மறைபொருளான திரித்துவத்தைப் புரிந்துகொள்ள நாம் எடுக்கும் நேர்மையான முயற்சிகள் எப்போதும் பயனற்றதாகவே இருக்கவேண்டும். மேலும் ஆழ்ந்த பக்தியினால் மட்டுமே அது உண்மையான துணிகரமாக மாராமல் காப்பாற்றப்பட முடியும். தங்களால் விளக்கமுடியாத எல்லாவற்றையும் மறுக்கும் சிலர் தேவன் திரித்துவமாயிருக்கிறார் என்பதை மறுக்கின்றனர். உன்னதமானவரைத் தங்கள் குறைந்த அறிவின் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, அவர் ஒரே நேரத்தில் ஒருவராகவும், மூவராகவும் இருப்பது இயலாத காரியம் என்று முடிவு செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் மறைபொருள்களால் சூழப்பட்டிருக்கிறது என்பதை மறக்கின்றனர். இயற்கையில் இருக்கும் மிக எளிமையான ஒரு விஷயதிற்கான சரியான விளக்கங்கள் கூட தெளிவின்மைக்குள் மறைந்து கிடக்கின்றன என்பதையும், தேவத்துவத்தின் மறைபொருளை விளக்குவதைவிடத் தெளிவாக அந்த எளிய விஷயத்தை விளக்கிவிட முடியாது என்பதைக் கருத்தில் கொள்ளத் தவறுகின்றனர். ஒவ்வொரு மனிதனும் நம்பிக்கையினாலேயே வாழ்கிறான், அவன் ஒரு அவிசுவாசியானாலும் அல்லது ஒரு பரிசுத்தவானானாலும். அவிசுவாசி இயற்கை விதிகளை நம்புகிறான். பரிசுத்தவான் தேவனை நம்புகிறான். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கை முழுவதும் பல காரியங்களைப் புரிந்துகொள்ளாமலே ஏற்றுக்கொள்ளுகிறான். மிக அதிகமான கற்ற ஞானி கூட “என்ன?” என்ற எளிய கேள்வி முன் மெளனனாகிறான். அந்த்க் கேள்விக்கான பதில், எந்த மனிதனுடைய கண்டறியும் திறனுக்கு அப்பால் அறியாமை என்னும் ஆழத்தில் நித்தியமாக மறைந்து கிடக்கிறது. “தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.” ஆனால் அழிந்துபோகின்ற மனிதனுக்கு அது முடியாது.
“இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.”
- யோபு 36:26
மூவரும் சம நித்தியரும்: சரிசமானரும்
.நிசேயா விசுவாசப் பிரமாணமும் பரிசுத்த ஆவியானவர் தேவனாகவும், பிதாவுக்கும், குமாரனுக்கும் சமமானவராகவும் இருக்கிறார் என்று கூறி பரிசுத்த ஆவியானவரைக் கனப்படுத்துகிறது:
தந்தையிடமிருந்து புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான
தூய ஆவியையும் நம்புகிறோம்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார்.
அதனாசியன் விசுவாசப் பிரமாணத்தை எழுதியவர்கள் தேவத்துவத்தின் மூன்று நபர்களுக்கும் இடையே உள்ள உறவை, மிக அதிகக் கவனத்தோடு எழுதி, தங்களால் இயன்ற மட்டும், வேதவசனங்களின் எல்லைக்கு வெளியே செல்லாமல், மனித சிந்தனையிலுள்ள இடைவெளிகளை நிரப்பினார்கள். அந்த விசுவாசப் பிரமாணம் இவ்வாறு கூறுகிறது: “இந்த திரித்துவத்தில் ஒருவரும் முந்தினவருமல்ல, பிந்தினவருமல்ல: ஒருவரில் ஒருவர் பெரியவருமல்ல, சிறியவருமல்ல.மூவரும் சம நித்தியரும்: சரிசமானருமாம்..” இந்த வார்த்தைகள் இயேசு கூறிய “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” என்ற வார்த்தைகளோடு எப்படி இசைகின்றன? அந்த முதிர்ந்த இறையியலாளர்கள் இதை அறிந்து, அந்த விசுவாசப் பிரமாணத்தில் இவ்வாறு எழுதினார்கள், “தேவத்தன்மையின் படி பிதாவுக்கு சரியானவர்: மனுஷத்தன்மையின் படி பிதாவுக்குத் தாழ்ந்தவர்” கண்களைக் குருடாக்கும் அளவுக்கு பிரகாசமான வெளிச்சத்தில் இருப்பது போல சரியாகப் புரிந்துகொள்ள முடியாத ஒரு இறையியல் பகுதியில், நேர்மையான மனதுடன் உண்மையைத் தேடும் எவரும் இந்த விளக்கத்தைச் சிறப்பானது என்று சொல்லுவார்கள். மனுக்குலத்தை மீட்பதற்கு நித்திய குமாரன் பிதாவின் மடியைவிட்டு வரவில்லை; இந்த உலகத்தில் மனிதரிடையே அவர் வாழ்ந்தபோது தம்மைக் குறித்து “பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரன் ” என்றும் ” பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரன்” என்றும் கூறினார்.
இங்கே மறைபொருள் இருக்கிறது ஆனால் குழப்பம் இல்லை. தன்னுடைய மனித அவதாரத்தில் குமாரன் தனது தேவத்தன்மையை மறைத்தாரே தவிர இல்லாமல் செய்யவில்லை. அவரது தேவத்தன்மையின் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுப்பதை தேவத்துவத்தின் ஒற்றுமை இயலாத ஒரு காரியமாக்கிற்று. மனிதனுடைய தன்மையை அவர் தன்மேல் எடுத்துக்கொண்டபோது, அவர் தன்னைத் தரம் தாழ்த்தவோ, அவர் எந்த நிலையில் அதற்குமுன் இருந்தாரோ அதிலிருந்து ஒரு சிறு பொழுதாகிலும் குறைவாகவோ இல்லை. தேவன் ஒரு போதும் தனக்குத் தாழ்ந்தவர் ஆகமுடியாது. தேவன் தன்னுடைய தன்மையைவிட்டு வேறு எந்த தன்மைக்கும் மாறுவது என்பது நினைத்துப்பார்க்க இயலாத ஒன்று.
நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
- யோவான் 14:28
இயேசுவும் பிதாவும் ஒன்றாயிருக்கிறார்கள்
தம்மைப் பிதாவோடும், ஆவியோடும் இணைத்துப் பேசுகையில், கிறிஸ்து பன்மை வடிவத்தை உபயோகிக்கத் தயங்கவில்லை: ““நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.”.ஆனாலும் அவர் இப்படியும் கூறினார்: “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.“: நபர்களைக் குழப்பாமலும், சாராம்சத்தைப் பிரிக்காமலும் தேவனை ஒருமையிலிருக்கும் திரித்துவராகப் புரிந்துகொள்ளுவது மிகவும் முக்கியமான ஒரு காரியம். அப்போது மட்டுமெ நாம் தேவனைப்பற்றிச் சரியாகவும், அவருடைய தரத்துக்கும், நம்முடைய சொந்த ஆத்துமாக்களுடைய தரத்துக்கும் தகுதியாகவும் சிந்திக்கமுடியும். நம்முடைய ஆண்டவர் தன்னைப் பிதாவுக்குச் சமமானவர் என்று கூறியதே, அவர் காலத்தில் இருந்த மதவாதிகளுக்கு கோபத்தை உண்டாக்கி இறுதியில் அவரை சிலுவைக்குக் கொண்டு சென்றது. இரண்டு நூற்றண்டுகள் கழித்து திரித்துவ உபதேசத்தின்மேல் ஆரியஸாலும், மற்றவர்களாலும் தொடுக்கப்பட்ட தாக்குதலும் கிறிஸ்துவுடைய தெய்வத் தன்மையைக் குறிவைத்தது. ஆரியஸால் உண்டான சர்ச்சையின்போது, 318 சபை பிதாக்கள் (அவர்களில் அநேகர் முந்தின உபத்திரவங்களில் அனுபவித்த சரீர வன்முறையால் முடமாக்கப்பட்டும் காயப்பட்டும் இருந்தார்கள்) நிசேயாவில் சந்தித்து ஒரு விசுவாச அறிக்கையைத் தழுவினார்கள். அதன் ஒரு பகுதி இப்படிச் சொல்லுகிறது:
“ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர்; தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய்த்தேவனில் மெய்த்தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர்;”
1600 வருடங்களுக்கு மேலாக, இது எற்றுக்கொள்ளப்பட்ட மரபின் கடைசிப் பரிசோதனையாக நிலைத்து நிற்கிறது. அது அப்படி நிலைத்து நிற்கவேண்டும். ஏனென்றால், அது தேவத்துவத்தில் குமாரனுடைய இடத்தைப் பற்றிய புதிய ஏற்பாட்டின் போதகத்தை இறையியல் மொழியில் சுருக்கமாகச் சொல்லுகிறது.
“அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.”
- யோவான் 10:29-30
ஏ. டபிள்யூ. டோசர் ( 1897 – 1963 ) அவர்களால் எழுதப்பட்ட “பரிசுத்தரைப் பற்றிய அறிவு” என்ற நூலிலிருந்து சில பகுதிகள்